الوصف
مقالة باللغة التاميية تبين أن شهر رمضان يُعلم علاقات وأخلاق إنسانية وينمي في الإنسان الصبر والحلم والرحمة والعفو وغيرها من الأخلاق الفاضلة ويبعد عنه الغضب والعداوة والبغض والحسد والثأر وغيرها من الأخلاق الرديئة
ஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான்
شهر رمضان شهر يحمل حلاوة إيمانية خاصة
< தமிழ் >
அப்துல் ஜப்பார் முஹம்மத் மக்தூம்
محمد مخدوم عبد الجبار
اسم المؤلف
முஹம்மத் அமீன்
ترجمة:
مراجعة: محمد أمين
ஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான்
அப்துல் ஜப்பார் முஹம்மத் மக்தூம்
முழு முஸ்லிம் சமூகமும் பரவசமடையும் ரமழான் மாதம் பல அருட்பாக்கியங்களை சுமந்த நிலையில் எங்களை வந்தடைந்திருக்கிறது. இந்த மாதம் வந்து விட்டாலே அனைவரும் ஈமானிய புத்துணர்ச்சி பெற்று புதுப் பொலிவுடன் தென்படுவதை அவதானிக்கலாம். இதற்கு முன் தென்படாத புதுப்புது முகங்களெல்லாம் அல்லாஹ்வின் இல்லங்களை நோக்கி நகரும் காட்சி, கல் நெஞ்சங்களெல்லாம் இளகி கண்ணீர் சிந்தும் காட்சி என இந்த மாதத்தில் ஈமானிய இதயங்களில் இன்பத்தையும், ஆனந்தத்தையும் அள்ளி வீசும் இன்னோரன்ன காட்சிகளை அவதானிக்கலாம்.
இது அபரிமிதமான நற்பாக்கியங்களையுடைய மாதமாகும். அளவில்லா நட்கூலிகளைப் பெற்றுத் தந்து, நாளை மறுமையில் இறைவனை சந்திக்கும் வேலை முடிவில்லா இன்பத்தையும், சந்தோஷத்தையும் தரும் மகத்தான அமலாகிய நோன்பின் மாதமாகும். ஆயிரம் மாதங்களின் நன்மைகளை ஒரே இரவில் அள்ளித் தரும் “லைலதுல் கத்ர்" எனும் அருட்பாக்கியங்கள் நிறைந்த ஓர் இரவை தன்னகத்தே தாங்கி வரும் மாதமாகும். இறை வேதமாகிய புனிதமிகு அல் குர்ஆன் இறக்கியருளப் பட்ட மாதமாகும்.
அல் குர்ஆன் வலியுறுத்தும் உயரிய பண்புகளை, ஒழுக்க விழுமியங்களை எல்லாம் கடைப்பிடித்து ஒழுக வழி அமைத்துக் கொடுக்கும் மாதமாகும். இஸ்லாம் போதிக்கும் மனித நேய பண்புகளை கற்றுக் கொடுக்கும் மாதமாகும். பொறுமை. சகிப்புத் தன்மை, பரிவு, கருணை போன்ற உன்னத பண்புகளை போதித்து பயிற்றுவிக்கும் மாதமாகும். பொறாமை, கோபம், குரோதம், பழிக்குப்பழி எனும் கொடூர உணர்வுகளை இல்லாதொழிக்கும் மாதமாகும். விட்டுக் கொடுப்பு மற்றும் மன்னிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் மாதமாகும்.
செல்வச் செழிப்பில் வாழ்வோர் பசியின் பாரத்தை உணர்வதின் மூலம் தம் கையால் சிரமத்துடன் உழைத்து சம்பாதித்த பொருளில் இருந்து ஏழை எளியோருக்கு வாரி வழங்கும் மகத்தான பண்பை ஊக்குவிக்கும் மாதமாகும். அனைத்து நல்லறங்களுக்கும் விரைந்து செலவு செய்யும் பண்பாட்டை உறுதிப் படுத்தும் மாதமாகும். அருவருப்பான உலோபித் தனத்தை அழித்தொழிக்கும் மாதமாகும்.
அது கடமையான தொழுகைகள் உட்பட இறைநேசர்களின் வழக்கமாகிய இரவில் நின்று வணங்கும் பழக்கத்தை சலிப்பின்றி கடைப்பிடித்து ஒழுக பயிற்சி அளிக்கும் மாதமாகும். படைத்து, பரிபாலித்து, போஷிக்கும் அகில உலக இரட்சகனாகிய அல்லாஹ்வை இரு கரமேந்தி பிரார்த்திக்கவும், நமது தேவைகளை அவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளவும் கற்றுத் தரும் மாதமாகும்.பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப் படும் மாதமாகும்.
அது மஹ்ஃபிரத் மற்றும் தௌபாவின் வாயிலைத் திறந்து, பாவச் சேற்றில் புதைந்து கிடப்பவர்களை தூய்மைப் படுத்தி, மனித புனிதர்களாக மாற்றி நரக விடுலையை பெற்றுக் கொடுக்கும் மாதமாகும். மனிதர்களை வழி கெடுப்பதை தமது தொழிலாக மேற்கொண்டு வரும் ஷைத்தான்கள் விலங்கிடப் பட்டு நல்லறங்களை நிம்மதியாக செய்வதற்கு சந்தர்பத்தை ஏற்படுத்தித் தரும் மாதமாகும்.
சுவர்க்கத்தின் வாயில் திறக்கப் பட்டு அதன் விருந்தாளிகளின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் மாதமாகும். தனிமையில் இருக்கும் போதும் இறைவனை அஞ்சி பாவங்களில் இருந்து தவிர்ந்து வாழ, முகஸ்துதி அற்ற நிலையில் நன்மைகளை புரிய இக்லாஸ் எனும் மனத் தூய்மையை அதிகரிக்கச் செய்யும் மாதமாகும்.
ஆக மொத்ததத்தில் “தக்வா" எனும் பயபக்தி உடையோரிடம் என்னென்ன பண்புகள் காணப்படுமோ அனைத்தையும் ஏற்படுத்தி பயிற்றுவித்து வளர்க்கும், ஈமானிய பயிற்சி பாசறையாக விளங்கும் உன்னதமான மாதம் தான் ரமழான்.
ரமழான் எனும் பயிற்சி பாசறை வழங்கும் அனைத்துபயிற்சி நெறிகளையும் கச்சிதமாக பூர்த்தி செய்து விட்டு வெளியேறுவோருக்கு வழங்கப் படும் சான்றிதழ் “தக்வா உடையோர்" “பயபக்தி உடையோர்" என்பதாகும். இதனையே இறை மறை பின்வருமாறு தெளிவு படுத்துகிறது..
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (سورة البقرة 183)
ஈமான்கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன்மூலம்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம் ஆகலாம். (அல் குர்ஆன் 2:183)
இந்த மாதத்தில் அகிலத்தின் அதிபதி அல்லாஹ் அளவின்றி அள்ளி வழங்க காத்துக் கொண்டிருக்கும் அளப்பெரிய பாக்கியங்களை அடைந்து கொள்ள முயட்சிக்காது, முற்றிலும் இலவசமான மற்றும் இலகுவான இந்த பயிற்ச்சி பாசறையின் தேர்வு பரீட்சையில் தோல்வியைத் தழுவுவோர், உண்மையிலேயே துர்பாக்கியமுடையோரே. அவர்களின் இழி நிலைப் பற்றி பின்வரும் நபி மொழி நமக்கு உணர்த்துகிறது.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ... وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ... (أخرجه الترمذي)
“யார் ரமழான் மாதத்தை அடைந்தும் அவன் பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்ளாத நிலையில் அவனை விட்டும் அது கடந்து சென்று விடுகிறதோ அவன் நஷ்டமடைந்து விடுவான்/ இழிவடைந்து விடுவான்" என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரைராஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். (திர்மிதி)
எந்த சங்கடமும் இன்றி ரமழான் நோன்பை உற்சாகத்துடன் நோற்று பாக்கியங்களை அடைந்து கொள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிகதிகம் நோன்பு நோற்று பழக்கப் பட்ட நிலையில் ரமழானை அடைய விரும்பியுள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ سَمِعَ عَائِشَةَ تَقُولُ كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَصُومَهُ شَعْبَانُ ثُمَّ يَصِلُهُ بِرَمَضَانَ (أبوداود، نسائي)
நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபான் ஆகும், அத்துடன் அதைத் தொடர்ந்துள்ள ரமழான் மாதத்தை (நோன்பு நோற்று பழக்கப் பட்ட நிலையில்) அடைவதையும் விரும்பினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னு அபீ கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவுத், நஸாயி).
ரமழான் வழங்கும் பல்வேறு பயிற்சி நெறிகள்
ரமழான் ஏனைய மாதங்கள் போன்றல்லாமல் பல்வேறு சிறப்பம்சங்களை பொதிந்ததாக திகழ்கின்றது, அதில் சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கும் அல் குர்ஆன் மொத்தமாக உலகின் வானுக்கு இறக்கியருளப் பட்டது மற்றும் ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலதுல் கத்ர் இரவை அந்த மாதம் பொதிந்துள்ளமை குறிப்பிடத் தக்கவைகளாகும்.
அதே நேரத்தில் இறைவனின் அருட்பாக்கியங்களை வென்ற "தக்வா" எனும் பயபக்தி உடையோரிடையே காணப்படும் அனைத்து விதமான நற்பண்புகள், பண்பாடுகள், நல்லொழுக்கங்கள், குணாதிசியங்கள் அனைத்தையும் போதித்து, பயிற்று விக்கும் ஆன்மீக பயிற்சி பாசறையாகவும் இந்த ரமழான் மாதம் விளங்குகிறது. அந்த உன்னதமான மாதம் நம்மை வந்தடைந்து விட்டு செல்லும் போதெல்லாம் அந்த பாசறை வழங்கும் பாடங்கள் மற்றும் அது நம்மில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் என்ன? என்பதைப் பற்றி சற்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்து பார்ப்பது அவசியமாகும்.
அந்த பாசறையை நிறுவி, அதனை வழிநடாத்தி செல்கின்றவன் அகிலத்தின் அதிபதி அல்லாஹ்வே. மேலும் அதன் பயிற்சிக்கான கால அளவு வெறுமனே ஒரு மாதம் மாத்திரம் தான். அதன் பாட நெறியானது சூரியன் உதயமானதில் இருந்து அதன் அஸ்தமனம் வரை உண்ணுதல், பருகுதலை தவிர்ப்பதோடு மனோ இச்சைகளை கட்டுப்படுத்தல் போன்ற எளிமையான, மிகவும் இலகுவான பாடத் திட்டமாகும். ஆனால் அதற்காக வழங்கப் படும் சான்றிதழ் மற்றும் வெகுமதிகள் விலை மதிப்பற்ற மிகவும் உயர்ந்ததும், பெறுமதியானது மாகும்.
சிறுவர்கள், வயோதிபர்கள், நோயுற்றோர் போன்ற அதற்கு சக்தி பெறாதோர் ஒரு சிறு பிரிவினரைத் தவிர மற்ற அனைவரும் இந்த பயிற்சி பாசறையில் நுழைந்து அதன் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்வதை இறைவன் கடமையாக்கியுமுள்ளான்.
அந்த பயிற்சி பாசறையில் தேர்வு பரீட்சையை கச்சிதமாக எழுதி முடித்து விட்டு வெளியேறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ் "தக்வா" உடையோர் என்பதாகும். மேலும் அதன் பயிற்சி நெறிகளை முறையாக முடித்து விட்டு வெளியேறுவோருக்கு அளவில்லா வெகுமதிகள், நன்கொடைகள், பரிசில்கள் எல்லாம் வழங்கப் படுகிறது. அவற்றை இறைவனே தன் கரத்தினால் அளவின்றி அள்ளி வழங்குவதாக வாக்குறுதியும் அளித்துள்ளான். அவ்வாறு அவர்களுக்கு வழங்கப் படும் பரிசில்களில் பாவ மன்னிப்பு, நரக விடுதலை, சுவன பாக்கியம் போன்றவை பிரதானமான வைகளாகும்.
இந்த உயரிய பாசறை வழங்கும் உன்னத பாடங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட தக்கவைகளாக பின்வருவன இடம் பெறுகின்றன.
1. முகஸ்துதியை தவிர்த்து மனத் தூய்மையை வளர்த்தல்
புனித நோன்பு கடமையை நோக்கும் பொழுது ஏனைய வழிப்பாடுகளில் இருந்து வேறுபட்டு அதற்கான தனி விஷேட அம்சம் ஒன்றை பொதிந்துள்ளதை அவதானிக்கலாம். அதுதான் முகஸ்துதியை தவிர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாகும்.
தொழுகை, ஸகாத், ஹஜ் போன்ற வணக்கங்களை எடுத்து நோக்கினால் அங்கே முகஸ்துதி ஏற்படு வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதை உணரலாம். அந்த வணக்கங்களைப் பொறுத்த வரையில் ஏனையோரால் காண முடியுமான வெளிப்படையான செயல்களினாலேயே நிறைவேற்றப் படுகிறது.
ஆனால் நோன்பை பொறுத்த மட்டில் பிற மனிதர்களால் காண முடியாத விதத்தில் சில செயல்களை தவிர்ப்பது மாத்திரமே. ஒரு நோன்பாளியின் உண்மை நிலையை இறைவனையன்றி வேறு யாரும் அறிய முடியாது. திரைக்குப் பின் நன்றாக உண்டு விட்டு, பருகி விட்டு நோன்பாளியைப் போன்று நடிப்பதற்கான வாய்ப்புக்கள் தாராளமாகவே இருக்கிறன. உண்மையிலேயே அல்லாஹ்வை அஞ்சி நடக்கும் ஒரு நோன்பாளி இவ்வாறு நடந்து கொள்ள மாட்டான். இதன் மூலம் முகஸ்துதி தவிர்க்கப் பட்டு, இக்லாஸ் எனும் மனத் தூய்மை வளர்க்கப்படுகிறது. இது தக்வா உடையோரிடம் காணப் படும் மிக முக்கிய பண்பாகும்.
2. மன வலிமை, பொறுமை மற்றும் சகிப்புத் தன்மைகளை வளர்த்தல்
ஒரு நோன்பாளி தன்னை வாட்டும் பசி, தாகம், மற்றும் இறைவன் அனுமதித்துள்ள ஹலாலான ஆசைகளை எல்லாம் இறைவனின் திருப்திக்காக தவிர்த்தல் மூலம் பல அசௌகரியங்களையும், சிரமங்களையும் எதிர் கொள்கிறான். இருப்பினும் இறை கட்டளைக்காக அந்த ஆசைகளுக்கு கட்டுப் படாது, அதன் மூலம் ஏற்படும் சிரமங்களை சகித்துக் கொண்டு பொறுமை காக்கின்றான்.
எந்நிலையிலும் நோன்பு கடமையை நிறைவேற்றி முடிப்பதில் உறுதியாக நிற்கின்றான். இந்த செயற்பாடுகளின் மூலம் நோன்பாளியின் மன வலிமை உறுதியாகிறது, மேலும் அவன் இறைவன் ஏவியவற்றை எடுத்து நடக்கும் போதும், அவன் தடுத்தவற்றை தவிர்ந்து நடக்கும் போது மற்றும் இறைவனின் சோதனைகளின் போது ஏற்படும் சிரமங்கள், கஷ்டங்களை பொறுமையுடன் எதிர்கொள்வதற்கும், சகிப்புத் தன்மையை கடைப் பிடிக்கவும் கற்றுக் கொன்கிறான். இவை தக்வா உடையவர்களிடம் காணப்படும் மற்றும் அவர்கள் நட்பாக்கியங்களை வென்றெடுப்பதற்கு காரணமாக அமையும் பண்புகளாகும்.
3. சுய கட்டுப் பாட்டுக்கான பயிற்சி
நோன்பு நோற்றிருக்கும் ஒருவன் அவன் நோன்பாளியா? இல்லையா? என்பதை அவனையும், அவனைப் படைத்த இறைவனையும் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். இறைவனுக்கு அஞ்சி அவனே சுயமாக அவனைக் கட்டுப் படுத்திக் கொண்டு நோன்பு கடமையை நிறைவேற்றுகிறான். இப்படியாக மனிதன் தன்னைத் தானே கட்டுப்படுத்தி, குற்றச் செயல்களில் இருந்து தவிர்ந்து கொள்ளவும், அனைத்து செயற்பாடுகளிலும் அகத்தை தானாகவே நிர்வகித்து, நெறிப்படுத்தவும் நோன்பின் மூலம் பயிற்சி பெறுகிறான். "தக்வா" உடையோரிடம் காணப்படும் இந்த பண்பை ஒருவன் தனதாக்கிக் கொள்ளும் போது குற்றங்களில் இருந்து அவனை கட்டுப்படுத்தவும், நெறிப் படுத்தவும் எந்த சட்டமோ, அதிகாரமோ அவசியமாகாது. சமூகத்தில் குற்றச் செயல்கள் ஒழிக்கப்படவும், சிறந்த பண்பாடுகள், ஒழுக்க விழுமியங்கள் மேலோங்கவும் நோன்பு இவ்வாறு தனது பங்களிப்பை செய்வதை காணலாம்.
4. மாபெரும் ஜிஹாதுக்கான பயிற்சி
ஷைத்தான் மற்றும் மனோ இச்சைகள் ஆகியன எப்போதும் மனிதனின் எதிரிகளாகவே இருக்கின்றன. அதன் தூண்டுதல்களுக்கு கட்டுப்பட்டு பாவங்கள், குற்றச் செயல்களில் ஈடுபடாது அவற்றுடன் போரிட்டு வெற்றிப் பெறுவதற்கான பயிற்சியை ரமழான் வழங்குவது கண்கூடானதே.
இது தவிர, அதிக தான தர்மங்களை நிறைவேற்றுதல், இரவு நேர நபில் தொழுகைகளை நிறைவேற்றல், அதிகம் குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல் என இன்னும் நிறைய இஸ்லாம் போதிக்கும் பண்புகள் மற்றும் ஒழுக்கங்களை ரமழான் பயிற்று விக்கின்றது. அவை அனைத்தும் நட்பாக்கியங்களை வென்ற "தக்வா" உடையோரிடம் காணப் படும் பண்புகளாகும். மிக முக்கியமானவை என கருதிய ஒரு சிலவற்றையே இங்கு குறிப்பிட்டேன்.
ரமழான் வழங்கும் பரிசில்கள், பாக்கியங்கள், வெகுமதிகள் அனைத்தையும் ஒருவன் அடைந்து கொள்ள அந்த பாசறையில் இறை விசுவாசத்துடனும், நன்மைகளை இறைவனிடம் எதிர்பார்த்த நிலையிலும் நுழைந்து, அதன் போதனைகளை வாழ்வில் எடுத்து நடப்பதோடு, அது பயிற்று விக்கும் பண்பாடுகளை என்றும் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். ரமழான் வழங்கும் பயிற்சி நெறிகளை அந்த மாதத்துக்குள்ளேயே முடக்கி விடுவதால் அதன் முழு பலனையும் அடைந்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்தவர்களாக நாமும் இந்த புனிதமான மாதத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள், பண்பாடுகளை என்றும் கடைப்பிடித்து ஒழுக முயட்சிப்போமாக! எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் அதற்காக நல்லருள் பாலிப்பானாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் ரமழானை அடைந்து அதனை பலனுள்ளதாக கழித்து இறை அருளையும், பாக்கியங்களையும் வென்ற புண்ணிய சீலர்களான பயபக்தியாளர்கள் வரிசையில் நம்மனைவரையும் ஆக்கியருள்வானாக…